கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் இதுதான் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!


அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வரத் தயக்கம் காட்டியதால் தான் உயிரிழப்பு அதிகரித்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "விஷ சாராயம் அருந்தி 3 பெண்கள் உட்பட இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். விஷ சாராயம் அருந்திய 9 பெண்கள் உட்பட 168 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது . வீடுகள் தோறும் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பெற தயங்கிய 55 பேருக்கு மருத்துவமனை அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

600 படுக்கை வசதி கொண்ட கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைக்கு வரத் தயக்கம் காட்டியதால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன. எரியும் நெருப்பில் குளிர் காய்வதைபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு உள்ளது. ஓம்பிரசோல்(Omeprazole) மாத்திரை பற்றாக்குறை இருப்பதால் உயிரிழப்பு அதிகரித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் நம்மிடம் 4.42 கோடி ஓம்பிரசோல் மாத்திரைகள் இருப்பு உள்ளது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விஷ சாராயம் அருந்தி 53 பேர் உயிரிழந்தனர். 2001ல் யாரும் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லவில்லை

எடப்பாடி பழனிசாமி

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றக்கூடியவர்களுடன் இணைந்து 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்

x