ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணை எதிர்த்து ஒய்எஸ்ஆர்சிபி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், தோல்வியை அடுத்து தனது சபதத்தின்படியே பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடைபெற்ற ஒருசில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களின் வரிசையில் ஆந்திராவும் அடங்கும். அங்கு பாஜக மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், தேசிய ஜனநாயகக் கூட்டணியாக களமிறங்கியது. ஆட்சியிலிருந்த ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கூட்டணி உபாயங்களை தவிர்த்துவிட்டு நம்பிக்கையுடன் தனித்து நின்றார். தேர்தல் முடிவில் ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் அதற்கு முந்தைய தேர்தல்களில் குறிப்பிடும்படியான வெற்றி எதையும் பெறவில்லை. இதனால் அவரை எதிர்த்து பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இம்முறை களமிறங்கிய ஒய்எஸ்ஆர்சிபி மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் என்பவர் அலட்சியமாக சவடால் விட்டிருந்தார். பவன் கல்யாணிடம் தோற்றால் எனது பெயரை மாற்றிக்கொள்கிறேன் என்று மேடை தோறும் சபதமிட்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் பவன் கல்யாண் மட்டுமன்றி அவரது ஜனசேனா கட்சியும் அபரிமிதமான வெற்றியை பெற்றிருந்தது. மாநிலத்தின் துணை முதல்வராகவும் பவன் கல்யாண் முடிசூடியிருக்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை அமைத்ததிலும் பவன் கல்யாண் கட்சியும் முக்கிய இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, பவன் கல்யாண் ரசிக தொண்டர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஒய்எஸ்ஆர்சிபி மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் அதிகம் ஆளானார்.
அவற்றில் ஒன்றாக ’பவன் கல்யாணிடம் தோற்றால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன்’ என்ற பத்மநாபத்தின் சபதம் அதிகம் சர்ச்சையானது. சமூக ஊடகங்களில் கிண்டல் கேலி அதிகரித்ததில், பத்மநாபம் அதிரடியாக தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். அதன்படி முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை அதிகாரப்பூர்வமாக 'பத்மநாப ரெட்டி' என மாற்றிக் கொண்டார். ’எவருடைய நெருக்கடியும் இன்றி சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பெயரை மாற்றியதாக’ அவர் சமாளித்தாலும், ‘இதன் பிறகாவது பவன் கல்யாண் ரசிகர்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் துஷ்பிரயேகம் செய்வதை நிறுத்துவார்கள்’ என நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.