மலிவான அரசியல் செய்யும் எதிர்க்கட்சியினர்; நான் எங்கும் ஓடி ஒளியவில்லை - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!


முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு…

எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்…’ என அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

அந்த காணொலியில், ‘அமைச்சர்கள் மட்டுமல்லாமல், உள்துறைச் செயலாளரையும், டி.ஜி.பி.யையும் நேரில் செல்ல உத்தரவிட்டிருந்தேன். அவர்களை இரண்டொரு நாளில் விசாரணை அறிக்கையைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.

நம் அனைவருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனையை அளித்துள்ள இந்தத் துயர சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

இதன் முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர், திருக்கோவிலூர் சட்டம்-ஒழுங்குக் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தீர விசாரிக்கவும், அதனடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கினை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க உத்தரவிட்டேன். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.,யும் நேரில் சென்று விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.

எதிர்கால சமுதாயத்தை மிக மோசமான வகையில் பாதிக்கும் போதைப் பொருள்களை எந்தவகையிலும் அனுமதிக்க இயலாது என்ற அடிப்படையில், இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றோம்.

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.’ என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று சட்டசபை தொடங்கியதும் விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. முதல்வர் பதவி விலகவேண்டும் என்ற கோஷத்துடன், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மற்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 122 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

x