சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் துவக்கிய தென்னாப்பிரிக்கா... 18 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது!


தென்னாப்பிரிக்கா அணிக்கு சூப்பர் 8 சுற்றில் முதல் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து, சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நேற்று துவங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சார்டஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்

இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டீ காக் 74 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் எய்டன் மார்க்ரம் 46 ரன்களும், ஹெயின்றிக் கிளாசன் 36 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனால் 20 அவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தென்னாபிரிக்க அணி 194 ரன்கள் எடுத்தது.

அமெரிக்கா தரப்பில் நெட்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அமெரிக்கா அணி வீரர் ஆண்டிரீஸ் கவுஸ்

பிற வீரர்களும் அடுத்தடுத்து சொற்பரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறத் துவங்கினர். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய ஆண்ட்ரீஸ் கவுஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட 80 ரன்கள் குவித்தார். 5வது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்த ஹர்மீத் சிங் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ரபடா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

x