திருப்பத்தூர் அருகே மறைந்த தாய்க்கு சுமார் ஒரு கோடி மதிப்பில் மகன்கள் கோயில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன்களும் இன்று மிகப்பெரும் தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ளனர். முத்துக்காளி அம்மாள் தனது 3 மகன்களையும் படிக்க கடுமையாக உழைத்துள்ளார். தனது தாலியை அடகு வைத்து மகன்களை பணம் கட்டி படிக்க வைத்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் தனது 62 வயதில் காலமானார்.
இந்நிலையில் மகன்கள் மூவரும் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினர். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்து ரூ.1கோடி செலவில் பிரமாண்ட அளவில் கோவில் கட்டினர். இக்கோயிலில் பிரதான கோபுரமும், தங்கத்தால் செய்யப்பட்ட கலசமும் பொருத்தப்பட்டு உள்ளன. பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவில் எழுப்பப்பட்டு கோவில் கருவறையில் தனது தாயிக்கு சுமார் 460 கிலோ எடை கொண்ட, 5 அடி ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதற்காக பிரமிப்புமிக்க யாக சாலைகள் அமைப்பட்டு, நான்கு கால பூஜைகளுடன் யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் புனித குடங்களுக்கு தீபாராதனை நடைபெற்று அதன் பின்பு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி கோயில் கோபுரம் வந்தடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க விமானத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவராக விட்டிருக்கும் மூவரின் தாயான முத்துகாளி அம்மாளின் சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து வைத்து, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முத்துகாளி வளர்த்து வந்த வீரன் என்ற மஞ்சுவிரட்டு காளை கோவில் முன்பு நிறுத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது.
தன்னை ஈன்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்திற்கு பிள்ளைகள் அனுப்பி வைப்பது அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், மூன்று மகன்கள் இணைந்து கட்டியிருக்கும் இந்த தாய் கோயில், ஒவ்வொரு தாய்க்கும் பெருமை சேர்க்கும் என்றால் மிகை ஆகாது.