சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை சென்றபோது கடும் வெப்பம் காரணமாக ஜோர்டான், ஈரானை சேர்ந்த 19 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹஜ் யாத்திரையின்போது ஜோர்டான் யாத்ரீகர்கள் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேரை காணவில்லை என ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரானிய ரெட் கிரசண்ட் தலைவர் பிர்ஹோசைன் கூலிவாண்ட் கூறுகையில், "இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது மெக்கா மற்றும் மதீனாவில் இதுவரை 5 ஈரானிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்" என்றார்.
எனினும் இவர்களின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து இருநாடுகளும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அதேபோல், ஹஜ் பயணத்தில் இறந்தவர்கள் குறித்து சவுதி அரேபியா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
உலகின் மிகப்பெரிய, மதம் சார்ந்த புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமின் 5 கடமைகளில் ஒன்றாகும். மேலும் அனைத்து முஸ்லிம்களும் ஒரு முறையாவது அதை நிறைவேற்ற வேண்டும்.
இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர யாத்திரையின் போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) கடந்துள்ளது. வெப்பநிலை கடுமையாக இருப்பதால் அது வயது முதிர்ந்தோருக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பருவநிலை கட்டுப்பாட்டுப் பகுதிகள், தண்ணீர் வழங்குதல் மற்றும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து யாத்ரீகர்களுக்கு அறிவுரைகள் வழங்குவது போன்ற வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளை சவுதி அரேபியா அரசு செயல்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஹஜ்ஜின் போது குறைந்தது 240 பேர் (இந்தோனேசியாவைச் சேர்ந்த பலர்) இறந்தனர். பல நாடுகளால் அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இறப்புக்கான காரணங்கள் குறிப்பிடவில்லை.
சவுதி பிராந்தியத்தில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் வெப்பநிலை 0.4 செல்சியஸ் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.