அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில், மேற்கு வங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறையால் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பா் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால், அதனடிப்படையில் 2014 மற்றும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றும், நோ்காணலுக்கு அழைக்கப்படவில்லை என மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் கொல்கத்தா உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ராஜசேகா் மந்தா விசாரித்தாா். அப்போது, " மூன்றாம் பாலினத்தவா்களுக்கு தங்கள் பாலினத்தை தாமாக முடிவு செய்யும் உரிமையை உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. திருநங்கையர், திருநம்பியர் ஆகியோரை மூன்றாம் பாலினமாக கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவா்களது மூன்றாம் பாலினத்தவா் அடையாளத்துக்கு சட்டபூா்வமானஅங்கீகாரம் வழங்கவும், அவா்களுக்கு கல்வி நிறுவனங்களில் மற்றும் பொது வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உறுதி செய்ய வேண்டும்" என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அவா் சுட்டிக்காட்டினாா்.
மேலும்," மேற்கு வங்க அரசின் 2022-ம் ஆண்டு அறிவிப்பையும் சுட்டிக்காட்டி அனைத்து பொது வேலைவாய்ப்பிலும் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யவும், மனுதாரருக்கு ஆசிரியா் நியமன கலந்தாய்வு மற்றும் நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கவும் வேண்டும்" என உத்தரவிட்டாா்.