சென்னை அருகே மின்மாற்றியில் மின்சார இணைப்பு கொடுக்க முயன்ற மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் இன்று காலை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. அதனை சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர் கங்காதுரை (50) என்பவர் மின் இணைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து மின்மாற்றியில் ஏறி மின்சார இணைப்பு கொடுக்க அவர் முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த கங்காதுரையின் உடல் மின்மாற்றியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்ததால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மணிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, கங்காதுரையின் உடலை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.