தஞ்சை அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, மண்ணுக்கு அடியிலிருந்து 14 சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில்தேவராயன்பேட்டை கிராமத்தில் மச்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகில் முகமது பைசல் என்பவர் வசித்து வருகிறார். இந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்த முகமது பைசல் இன்று காலை இதற்காக பள்ளம் தோண்ட முடிவு செய்திருந்தார். இதன்படி ஜேசிபி உதவியுடன் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது பள்ளத்தில் இருந்து ஒரு ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவர்கள், உடனடியாக வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக கவனத்துடன் தோண்டியுள்ளனர்.
அப்போது அடுத்தடுத்து சாமி சிலைகள், பூஜைப் பொருட்கள் ஆகியவை மண்ணிலிருந்து வெளிவந்த வண்ணம் இருந்ததால் அவர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். உடனடியாக இது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், சந்திரசேகரன், திருநாவுக்கரசர், விநாயகர் உள்ளிட்ட 14 சாமி சிலைகளும், பூஜைப் பொருட்களும் இங்கு கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கோயிலின் அருகில் குவிந்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சாமி சிலைகளை பக்தி சிரத்தையுடன் அவர்கள் வழிபட்டனர்.
பின்னர் அங்கு வந்த வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், 14 சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்களை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனிடையே மண்ணில் இருந்து கிடைத்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை எனவும், 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகே இந்த சிலைகளின் உண்மையான காலம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.