போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய தடை; கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு


எடியூரப்பா

போக்சோ வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.

போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பா ஜூன் 17 அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எடியூரப்பா

பிப்ரவரியில் எடியூரப்பா இல்லத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது ‘தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக’ எடியூரப்பா மீது பெண்ணின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 14 அன்று எடியூரப்பாவுக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணின் 54 வயதாகும் தாயார் கடந்த மாதம் திடீரென இறந்தார். நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவர் இறந்ததாக சொல்லப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்திருக்கும் எடியூரப்பா, சட்டரீதியாக போராடுவேன் என்றார். சிஐடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளார். இதனிடையே நேற்றைய தினம் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, தேவைப்பட்டால் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என்று கூறினார். இதனால் எப்போது வேண்டுமானாலும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைதாகும் சூழல் எழுந்தது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

இதனிடையே இன்றைய தினம் தனக்கு எதிரான பிடிவாரண்டுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தடை பெற்றுள்ளார். ”எடியூரப்பா முழு ஒத்துழைப்பு வழங்குவதால் அவரை எந்த வகையிலும் கைது செய்யக்கூடாது. எனவே, அத்தகைய உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. வரும் 17 அன்று ஆம் தேதி ஆஜராகப் போகிறேன் என்று அவர் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். அதன்படி அவர் நிச்சயம் ஆஜராவார்” என்று எடியூரப்பாவின் வழக்கறிஞர் சந்தீப் பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மைனர் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வழக்கில், எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த மறுநாளே உயர் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு வந்திருப்பது அவருக்கு தற்காலிக ஆறுதல் அளித்துள்ளது.

x