‘பாஜகவின் ஆணவத்துக்கு ஸ்ரீராமர் முடிவு கட்டினார்’ - மீண்டும் ஆர்எஸ்எஸ் ஆவேசம்


பாஜக ஆர்எஸ்எஸ்

2024 மக்களவைத் தேர்தலில் 241 இடங்களை மட்டுமே பெற்றதற்கு, பாஜகவின் ஆணவமே காரணம் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.

அண்மையில் பாஜகவுக்கு எதிரான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தின் விமர்சனக் கருத்துகளை தொடர்ந்து, மற்றொரு மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் பாஜக மீது பாய்ந்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியதை சுட்டிக்காட்டி அக்கட்சியை தற்போது சாடியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பேசிய அந்த அமைப்பின் மூத்த தலைவரான இந்திரேஷ் குமார், ’பாஜக’ என நேரடியாகப் பெயரிடுவதை தவிர்த்தாலும், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பாஜகவை தாக்கினார்.

இந்திரேஷ் குமார்

”2024 பொதுத்தேர்தலில் ஸ்ரீராமர் வழங்கிய நீதியை நீங்கள் பார்க்கலாம். ராமரை வணங்கியே படிப்படியாக வளர்ந்ததில் ஆணவம் கொண்ட கட்சியானது. ஆனால், அந்த ஆணவத்தால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளும், அதிகாரமும் கடவுளால் தடுக்கப்பட்டுள்ளது" என்று கனோட்டாவில் நடைபெற்ற அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜன் சமரோ நிகழ்வில் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “ராமரை எதிர்த்தவர்கள் ஒன்றுபட்டாலும் அதிகாரத்தைப் பெற முடியாது. முதலிடத்திற்கு வர வேண்டிய அவர்கள் ராமரை எதிர்த்ததால் இரண்டாவது இடத்தில் தேங்கினாகள். கடவுளின் நீதி விசித்திரமானது என்ற உண்மையை இது நிரூபிக்கிறது” என்று எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணியையும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் வெற்றியை பொய்த்துப் போனதையும் தாக்கினார்.

'உண்மையான சேவகர்' ஆணவத்தைக் கொண்டிருக்கமாட்டார் என்று அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் அண்மையில் பாஜகவை தாக்கியிருந்தார். அந்த வரிசையில் மீண்டும் பாஜக ஆணவத்தை தன் பங்குக்கு இந்திரேஷ் குமார் தாக்கியுள்ளார். ’பக்தி இருந்தபோதிலும், பாஜக தனது ஆணவத்தால் 241 இடங்களுக்குள் சுருண்டதையும், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட்டு சேர்ந்தும் 236 இடங்களை மட்டுமே பெற்றதாகவும்’ அவர் சுட்டிக்காட்டினார்.

மோகன் பகவத் - மோடி

இந்த கருத்துக்கள் பாஜகவுக்கும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே வளர்ந்து வரும் விரிசலை எடுத்துக்காட்டுகிறது. முன்னதாக பாஜகவின் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா அளித்த பேட்டி ஒன்றில், பாஜக முதிர்ச்சியடைந்து இருப்பதாகவும், இப்போது ஆர்எஸ்எஸ்-ல் இருந்து பாஜக சுதந்திரமாக இயங்குகிறது’ என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது முதலே பாஜக - ஆர்எஸ்எஸ் விரிசல் பாஜக தரப்பிலிருந்து வெளிப்பட்டிருந்தது. தற்போது அதையே, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தங்கள் பங்குக்கு அம்பலப்படுத்தி வருகின்றனர். அதிலும் பாஜகவின் தேர்தல் சரிவை சுட்டிக்காட்டியதில் பாஜகவை கடுமையாக ஆர்எஸ்எஸ் சீண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x