மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோரம், வடக்கு அந்தமான் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் ஜூன் 16-ம் தேதி மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலாவில், 4 செ.மீ மழை பெய்துள்ளது. இதை தவிர சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், 1 முதல் 3 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
தென் மாநிலங்களின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். வரும் ஜூன் 18-ம் தேதி வரையிலும், ஒரு வாரத்துக்கு பெரும்பாலான இடங்களில், கனமழைக்கு வாய்ப்பில்லை. சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோரம், வடக்கு அந்தமான் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, வரும், 16ம் தேதி மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை, கேரளாவைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. அதனால் வரும் நாட்களில் வட மாநிலங்களில் பருவமழை கொட்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.