டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு 3வது வெற்றி... அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!


இந்திய கிரிக்கெட் அணி

அமெரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ’ஏ’ பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பங்கேற்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அமெரிக்கா அணியில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் 27 ரன்களும், ஸ்டீவன் டைலர் 24 ரன்களும் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி, 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணி

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 3 ரன்களிலும், விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய சூரியகுமார் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து இறுதிவரை அவுட் ஆகாமல் அசத்தினார்.

இந்தியா - அமெரிக்கா போட்டி

அவருடன் இணைந்து சிவம் தூபே 31 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 18.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 111 ரன்கள் எட்டியது. அமெரிக்கா தரப்பில் நெட்ரவால்கர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 6 புள்ளிகளுடன் ’ஏ’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

x