மத்திய வேளாண் அமைச்சராக மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முக்கிய விவசாயிகள் அமைப்புகள் போராட்டத்துக்கு தயாராகி வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சூரில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் சிவராஜ் சிங் சவுகான் மீது குற்றம்சாட்டிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்) அமைப்பு, அவருக்கு வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தை ஒதுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எஸ்கேஎம் சார்பில் இன்று வெளியான அறிவிப்பில், சுவாமிநாதன் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் அப்பாவி விவசாயிகள் 6 பேர் கொல்லப்பட்டார்கள் என தெரிவித்துள்ளது. ஜூலை 10 அன்று டெல்லியில் நடைபெறும் தனது பொதுக்குழு கூட்டத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் எஸ்கேஎம் தெரிவித்தது.
”சிவராஜ் சவுகானை மத்திய வேளாண் அமைச்சராக நியமித்திருப்பது 2014 மற்றும் 2019 ஆட்சிகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கான பாஜகவின் ஆணவம் மற்றும் உணர்ச்சியற்ற தன்மையை உறுதி செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது" என்றும் எஸ்கேஎம் தெரிவித்துள்ளது.
2017 ஜூன் மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சூரில் விவசாயிகள் போராட்டக் குழு மீது போலீஸார் மற்றும் சிபிஆர்எஃப் பிரிவினர் துப்பாக்கியால் சுட்டதில் 6 விவசாயிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் அப்போது அதிகாரத்தில் இருந்த சிவராஜ் சிங் சவுகானை குற்றம்சாட்டும் விவசாய அமைப்புகள், அவரை வேளண் துறைக்கு நியமித்திருப்பதன் மூலம் பாஜக சொல்லவரும் சேதி என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
வட இந்தியாவில் பாஜகவுக்கான வாக்குவங்கி சரிவு கண்டதில் விவசாயிகளின் போராட்டத்துக்கு முக்கிய பங்குண்டு. விவசாயிகள் கூட்டு அமைப்பு அடுத்த சுற்று போராட்டத்துக்கு தயாராகி வருவதன் மத்தியில், அவர்களின் எதிர்ப்புக்கு ஏற்கனவே ஆளான சிவராஜ் சவுகானை துறை அமைச்சராக நியமித்ததற்கு அதிருப்தி எழுந்துள்ளது. இவை விவசாயிகள் அமைப்பு - மத்திய அரசு இடையிலான பிணக்கை மேலும் அதிகரிக்கச் செய்யக்கூடும்.