ஒடிசா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி; 2 துணை முதல்வர்களும் பொறுப்பேற்பு!


ஒடிசாவில் பாஜக ஆட்சியை பிடித்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி, 2 துணை முதல்வர்கள், 8 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, மாநில சட்டப் பேரவைக்கு உள்ள 147 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் அம்மாநிலத்தில் 24 ஆண்டுகளாக முதல்வராக நீடித்து வந்த பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஒடிசாவின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கு பாஜக தலைமை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பூபேந்திர யாதவ் ஆகியோரை மேற்பார்வையாளர்களாக நேற்று அம்மாநிலத்துக்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கியோஞ்சர் தொகுதியில் வெற்றி பெற்ற மோகன் சரண் மாஜி, பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல், கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவரும் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து இரண்டு துணை முதல்வர்கள், 8 அமைச்சர்கள் மற்றும் 5 இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு) பதவியேற்றனர்.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள் ஜே.பி. நட்டா, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x