"'இந்தியன்2’ படம் தயாரிக்காதது வருத்தம்தான்” என தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவான கிளாஸிக் ஹிட் படங்களில் ஒன்று ‘இந்தியன்’. இதில் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கெட்டப், கிராஃபிக்ஸ் பணிகள் எனப் பல விஷயங்கள் முதல் முறையாக முயற்சி செய்யப்பட்டது. இந்த விஷயங்களுக்காக இன்று வரை ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் கொண்டாடப்படுகிறது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் சமயத்தில், சமீபத்தில் ’இந்தியன்’ முதல் பாகம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் குறித்தான பல சுவாரஸ்ய விஷயங்களை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்து தமிழ் உடனான நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியிருப்பதாவது, “’இந்தியன்’ கதையில் பல விஷயங்களை நாங்கள் முதல் முறையாக முயற்சி செய்திருப்போம். ‘இந்தியன்’ படத்திற்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் ‘நாயகன்’ உள்ளிட்ட சில படங்களில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால், அதில் நரைமுடி மட்டும்தான் வைத்திருப்பார். இதில் தோற்றத்தையே மாற்றி நடித்திருப்பார். அந்த ஐடியா கொடுத்ததும் அவர்தான்.
ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்பிற்கு ஆட்கள் கூட்டி வந்தார். சுகன்யா, கமல் இரண்டு பேருக்கும் மேக்கப் செய்யவே கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆனது. படத்தை போலவே பாடல் கிராஃபிக்ஸ் பணிகளுக்கும் நாங்கள் வேலைப் பார்த்தோம். இந்த கிராஃபிக்ஸ் பணிகள் எல்லாமே அப்போது ஹாங்காங்கில் நடந்தது. ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் நாமினேட் ஆகியது.
ஆனால், அதற்கான ரூல்ஸ் & ரெகுலேஷன் என்ன என்பது அப்போது எங்களுக்குத் தெளிவாகத் தெரியாது. இதுதான் ‘இந்தியன்’ படத்திற்கு ஆஸ்கர் மிஸ் ஆனதுக்கு முக்கியக் காரணம்” என்றார்.
அவரிடம் ’இந்தியன்2’ தயாரிக்காதது பற்றிக் கேட்டோம், “இப்போது தயாரிப்பு நிறுவனங்கள் மாறிவிட்டது. ஷங்கர் இதற்கு முன்பு லைகாவுடன் ‘2.0’ படம் செய்திருந்தார். இதனால், இன்னொரு படம் லைகாவுக்கு செய்து தர வேண்டும் என்ற ஒப்பந்தம் அவர்களுக்குள் இருந்தது.
இதற்காக என்னிடம் வந்து பேசினார். நானும் ‘இந்தியன்2’ தயாரிப்பை விட்டுக் கொடுத்தேன். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, ‘நானே தயாரித்து இருக்கலாமோ’ என்ற வருத்தம் இல்லாமல் இல்லை” என்றார்.