கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நடிகை ரம்யா வலியுறுத்தியுள்ளார்.
கன்னட சினிமாவில் ‘அனதரு’ (Anatharu), ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ (Krantiveera Sangolli Rayanna) உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ (Kaatera) திரைப்படம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பெங்களூரு மருந்து கடையில் வேலை செய்யும் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா சாமி(28) என்ற இளைஞர், நடிகர் தர்ஷனையும், அவரது காதலியான பவித்ரா கவுடாவையும் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இதனால் தர்ஷனின் நெருங்கிய நண்பர்களால் ஜூன் 8-ம் தேதி ரேணுகாசாமி கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெங்களூரு ஆர்ஆர் நகர் சும்மனஹள்ளியில் உள்ள ராஜ்கலுவே அருகே கடந்த ஜூன் 9-ம் தேதி தெருநாய்கள் குப்பைகளை இழுத்துச் சென்றபோது ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வந்து பார்த்த போது அந்த உடலில் முகம், தலை மற்றும் காதுகளில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் யாரோ அவரைக் கொன்று வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீஸார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அது ரேணுகாசாமியின் சடலம் என்பது தெரிய வந்தது.
இந்த வழக்கில் கிரிநகரைச் சேர்ந்த 3 பேர் நேற்று சரண் அடைந்தனர். நிதி காரணங்களுக்காக ரேணுகாசாமியை கொலை செய்ததாக அவர்கள் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியது போன நடிகர் தர்ஷனின் பெயர் வெளியானது.
இதையடுத்து மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் தர்ஷன் இன்று இருந்த போது பெங்களுரு போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தர்ஷனுடன் சேர்த்து பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கன்னட திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை ரம்யா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரிவு 302-ன் கீழ் நடிகர் தர்ஷனுக்கு தண்டனை விதிக்க வேண்டும். வேறு எந்த பணச் செல்வாக்கையும் இந்திய சட்ட அமைப்பையும் கேலி செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக அவர் ட்விட் செய்துள்ளார். பிரிவு 302 கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...