கடலூர் மற்றும் புதுச்சேரியில் இரு வேறு இடங்களில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறைஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி மற்றும் கார் ஓட்டுநருடன் உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கார் மூலம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். வேப்பூர் கூட்ரோடு அருகே சென்ற போது சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மூவரும் இறங்கியுள்ளனர். அப்போது திடீரென காரின் முன் பக்கம் புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் துவங்கியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி இருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அதற்குள் கார் முற்றிலும் இருந்து நாசமானது. அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இதேபோன்று புதுச்சேரி அருகே நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று தீயில் எரிந்து நாசமானது. புதுச்சேரி இந்திரா காந்தி சிலையிலிருந்து புதுச்சேரி நோக்கி சூர்யா என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் எதிரில் வந்த போது திடீரென அவரது இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார். தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில் அருகில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அதனை அணைக்க முயற்சித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரம்பி இருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.