3 கோடி வீடுகள் கட்ட உதவி... மோடி 3.0 முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவு!


மோடி 3.0 அமைச்சரவைக் கூட்டம்

மோடி 3.0 அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக, மத்திய அரசு உதவியில் 3 கோடி பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகளை கட்டுவதற்கான மத்திய அரசின் உதவிக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. லோக் கல்யாண் மார்க்கில் உள்ள மோடி இல்லத்தில் நடைபெற்ற மோடி 3.0 அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மோடி பதவியேற்பு

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்ற மறுநாளே கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லத்தில் இதற்காக அமைச்சர்கள் கூடினார்கள். புதிய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பதற்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது.

"தகுதியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, 3 கோடி கூடுதல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்க இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூட்டத்தின் நிறைவாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழான வீடுகள்

இந்திய அரசு 2015-16ம் ஆண்டு முதல் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு உதவி செய்கிறது.

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின் இணைப்பு உட்பட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதர திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகும்.

x