கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கொசூரில் பாதாம்கீர் கூல்டிரிங்ஸுக்கு ரூ.5 கூடுதலாக வசூலித்த பேக்கரி உரிமையாளர்களைத் தாக்கி, கடையை சூறையாடிய கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே கொசூரில் கோவிந்தராஜ், இவரது மகன் சிவக்குமார், சரவணன் ஆகியோர் பேக்கரி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை இவர்களது பேக்கரிக்கு கோட்டைகரையான்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வந்து பாதாம்கீர் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். பின்னர் அதற்குரிய தொகையை செலுத்த விலை கேட்டபோது, பேக்கரி உரிமையாளர் ஒன்றின் விலை ரூ.30 எனக் கூறியுள்ளார்.
ஆனால், பாதாம்கீர் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விலை ரூ.25 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் ரூ.5 விலை அதிகமாக கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால், பேக்கரி கடைக்காரருக்கும் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வேல்முருகன், கடைக்காரர் சொன்ன விலையை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்தில் தனது ஊர்க்காரர்கள், நண்பர்கள் என 11 பேரை கூட்டிக்கொண்டு மீண்டும் அந்த பேக்கரிக்கு வந்து விலை அதிகமாக வாங்கியது குறித்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பேக்கரி உரிமையாளர்களான கோவிந்தராஜ், சிவக்குமார், சரவணன் உள்ளிட்டோரை, வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த சேர்களை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...