குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் பதவியேற்பு விழா நடந்தபோது, பின்னணியில் சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், 71 அமைச்சர்களுடன் பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பதவியேற்றார்.
இந்த பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் அண்டை நாட்டு தலைவர்கள் மற்றும் நாடு முழுவதுமிருந்து முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என சுமார் 8,000 விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் முற்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றபோது, குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் மர்ம விலங்கு ஒன்று நடமடாடியதை, விழா தொடர்பான வீடியோ காட்சிகளில் இடம் பெற்றது பேசு பொருளாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை சிலர் சிறுத்தை என குறிப்பிடுகின்றனர். அந்த வீடியோ காட்சிகளில் பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது, சர்வ சாதாரணமாக விலங்கு போன்ற ஒரு உருவம் கடந்து செல்வதை காண முடிகிறது.
இந்த சம்பவம் நடந்தபோது, பாஜக எம்பி- துர்கா தாஸ் அமைச்சராகும் அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மேற்கொண்டிருந்தார்.
தற்போது இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் உலவியது சிறுத்தையா? சாதாரண பூனையா? அல்லது நாயா? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஒரு சமூக வலைதளவாசி வெளியிட்டுள்ள பதிவில், “அது பூனையாக இருந்தால் பரவாயில்லை. சிறுத்தை என்றால் பாதுகாவலர்கள் என்ன செய்கிறார்கள்? குடியரசு தலைவர் மாளிகையில் இப்படி ஒரு மீறலா?” என கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் வெளியிட்டுள்ள பதிவில், "வால் மற்றும் நடையை பார்க்கும்போது அது ஒரு மோசமான சிறுத்தை போல் தெரிகிறது. மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அது அமைதியாக கடந்து சென்றது "என தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...