கர்நாடகா மாநிலம், மங்களூரு, பொலியாரில் நேற்று நள்ளிரவு, பாஜகவினர் 2 பேரை முஸ்லிம் குழுவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முஸ்லிம் குழுவினர் மற்றொரு பாஜக தொண்டரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி நேற்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள பொலியாரில் பாஜகவினர் 'விஜயோத்ஸவா' என்ற பெயரில் இதனை நேற்று கொண்டாடினர்.
அப்போது மூன்று பாஜக ஆதரவாளர்கள், அப்பகுதியில் உள்ள ஒரு மசூதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பகுதியில் அவர்கள் கோஷம் எழுப்பியதாகவும், அப்போது பைக்கில் வந்த 20 - 25 முஸ்லிம் இளைஞர்கள் பாஜகவினரை பின்தொடர்ந்தததாகவும் போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அப்போது, மசூதிக்கு 2 கி.மீ. முன்னால் அமைந்துள்ள ஒரு மதுக்கடையின் முன் பாஜகவினர் 3 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதன் விளைவாக பாஜகவை சேர்ந்த இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மற்றொருவரை முஸ்லிம் குழுவினர் பயங்கரமாக தாக்கினர். கத்தியால் குத்தப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவிட்டார். மற்றொருவர் தேராலக்கட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
இந்நிலையில் தட்சிண கன்னட பாஜக தலைவர் சதீஷ் கும்பாலா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த தொண்டர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதற்கிடையே பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி, அக்கட்சியினர் ஏராளமானோர் கொனாஜே காவல் நிலையம் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...