அமைச்சர் பதவி வேண்டாம்; நடிகர் சுரேஷ் கோபி திடீர் அறிவிப்பு!


சுரேஷ் கோபி

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நேற்று இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சுரேஷ்கோபி தற்போது அந்த பதவி வேண்டாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல சினிமா நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். கேரளாவில் இருந்து முதல் முறையாக பாஜக சார்பில் மக்களவைத் தொகுதிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடியின் அமைச்சரவையில், அவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

இணை அமைச்சராக பொறுப்பேற்கும் சுரேஷ்கோபி

இதையடுத்து துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது சுரேஷ்கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று கேரள மாநிலத்தில் உள்ள ஊடகங்களுக்கு பேட்டியளித்த சுரேஷ்கோபி, ”எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என ஏற்கனவே பாஜக தலைமையிடம் தெரிவித்திருந்தேன். இருப்பினும் அவர்கள் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஆனால் என்னை விரைவில் பாஜக தலைமை, அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்க உள்ளதால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதனை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே எனது பதவியைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு பாஜக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றார்.

சுரேஷ்கோபி மகளின் திருமணத்தில் நேரில் பங்கேற்று வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சுரேஷ்கோபி இவ்வாறு அறிவித்துள்ளது தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் நடைபெற்ற போது பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்திருந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். திருச்சூரியில் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி சென்றிருந்த போதும், சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று பிரச்சாரத்தில் கூறியிருந்தார். மத்திய அமைச்சரவையில் நேரடி அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருந்த சுரேஷ்கோபி, தனக்கு இணை அமைச்சர் பதவி வழங்கியதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக இவ்வாறு தெரிவித்து இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

x