மக்களவைத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்தித்தாலும், அம்மாநிலத்தில் இருந்து 10 பேர் மத்திய அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் பாஜக தான் அதிக இடங்களை வென்றது. ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பாராத அதிர்ச்சியை உத்தரப்பிரதேச மக்கள் தந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஆர்எல்டி 2 தொகுதிகளிலும், அப்னா தளம் (எஸ்) ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆனால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற 72 அமைச்சர்களில் 10 பேர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடியைத் தவிர ராஜ்நாத் சிங்,கீர்த்திவர்தன் சிங், ஜிதின் பிரசாதா, ஜெயந்த் சவுத்ரி, பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், பி.எல்.வர்மா, கமலேஷ் பாஸ்வான், எஸ்.பி.பாகேல் ஆகிய பத்து பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஐந்து பிற்படுத்தப்பட்டோர், இரண்டு பட்டியல் சமூகத்தினர், மூன்று முன்னேறிய வகுப்பினர் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர்.