பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை இணைத்து கூட்டணி அமைச்சரவை அமைக்க பாஜக முடிவு செய்தது. இக்கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து இக்கூட்டணி சார்பாக பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது முறையாக பதவியேற்றவர் என்ற பெருமையை மோடி பெற்றார். அவருடன் 72 பேர் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற மோடிக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் (தவெக) நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," பிரதமராகத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.