படிக்கட்டு அருகில் நின்றுக் கொண்டே பயணம்; பேருந்தில் இருந்து கீழே விழந்த பெண்ணால் பரபரப்பு!


பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த பெண்ணுக்கு தலையில் படுகாயம்

ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்த பெண், திடீரென பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி. இவர் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தார். பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் செய்தார். அப்பெண் நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கைப் பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே சாலையில் விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த தீபலட்சுமியை, சக பயணிகள் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பெண் பேருந்தில் இருந்து வெளியே தவறி விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும், பேருந்து நடத்துநர் தவறி விழும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x