பெங்களூருவில் அதிர்ச்சி... போலி ஆவணம் மூலம் காவல் துறை அலுவலகத்தை விற்க முயற்சி; 3 பேர் கைது!


பெங்களூரு எஸ்.பி அலுவலகம்

போலி ஆவணங்களைத் தயார் செய்து பெங்களூரு புறநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக சொத்தை விற்க முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நில மோசடி செய்து விட்டனர் என்று காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க பொதுமக்கள் போவார்கள். ஆனால், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக சொத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரின் மையப்பகுதியில் பெங்களூரு புறநகர் காவல் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் நேபாள மன்னர்களின் பெயரில் உள்ளதாகவும், இந்த இடம் தொடர்பாக சிவில் பிரச்சினை உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூன் 3-ம் தேதி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் அனுமதியின்றி ஹனிஃப் என்பவர் நுழைந்து புகைப்படம், வீடியோ எடுத்து வாட்ஸ் - அப்பில் சிலருக்கு அனுப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது அலுவலகத்தில் இருந்த வயர்லெஸ் துறையில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கவுடா, “நீங்கள் யார்? வெளியே போய் வீடியோ எடுங்கள்” என்று கூறியுள்ளார்.

அதற்கு, ”இந்த இடம் மோகன்ஷெட்டி மற்றும் ராஜசேகர் பெயரில் உள்ளது. இந்த இடத்தின் ஜிபிஏ என் பெயரில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் கவுடா, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றார். அத்துடன் ஹனிஃப்புட்ன் சேர்ந்து போலி ஆவணங்களை உருவாக்கி எஸ்.பி அலுவலக சொத்தை விற்க முயன்றதாக ஹனிஃப், முகமது நதீம், மோகன் ஷெட்டி, கணபதி, ராஜசேகர் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

இதன் பேரில், ஐபிசி 353, 447 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஹைகிரவுண்ட் போலீஸார், குற்றவாளிகள் மூவரையும் இன்று கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ளவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். எஸ்.பி அலுவலக இடத்தையே போலி ஆவணம் மூலம் விற்க நடந்த முயற்சி பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

x