8 பவுன் நகைக்காக குளத்தில் மூதாட்டி மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி சத்தியம்மாள்(75). இவர்களது மகன் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சத்தியம்மாள் குளிக்கச் சென்றார். அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடிக் குளத்திற்குச் சென்றனர்.
அப்போது குளத்தின் கரையோரம் தண்ணீரில் சத்தியம்மாள் சடலமாக மிதந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், குளத்தில் இருந்து சத்தியம்மாளின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீஸாருக்கு அவர்கள் தெரிவித்தனர். இதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சத்தியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்கம்மல், தங்கச்சங்கிலி உள்பட 8 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது. அதனால் சத்தியம்மாளை குளத்திற்குள் மூழ்கடித்து மர்மநபர் யாரோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சத்தியம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. அப்போது அரசர்குளம் பேட்டை பகுதியைச் சேர்ந்த முகாஸ்ரின் (25) என்ற இளைஞர், சத்தியம்மாளை குளத்து நீரில் மூழ்கடித்து கொன்றதுடன், நகையைக் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த 8 பவுன் நகைகளையும் மீட்டனர். நகைக்காக மூதாட்டி நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.