‘ராமர் ஆசியால் வென்றோம்’ அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜகவை வீழ்த்தியவர் பெருமிதம்


வெற்றிக்களிப்பில் அவதேஷ் பிரசாத்

பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவை வென்றிருக்கிறார் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரச்சாரமாக அயோத்தி ராமர் கோயில் இருந்தது. ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்திய உற்சாகத்தில் மே மாதம் அங்கே மக்களவைத் தேர்தலை சந்தித்தது பாஜக. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாடெங்கும் ஆதரவு அலையை உருவாக்கும் என்றே பாஜகவும் அதன் தலைவர்களும் நம்பியிருந்தனர். ஆனால் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில், பாஜக அடைந்த தோல்வி அந்த நம்பிக்கையை பொய்க்கச் செய்திருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில்

சமாஜ்வாதியின் மூத்த தலைவரும் 9 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான அவதேஷ் பிரசாத், பட்டியலினத்தை சேர்ந்தவர். பாஜகவின் 2 முறை எம்எல்ஏவாக இருந்த லல்லு சிங்கை எதிர்த்து பைசாபாத்தில் அவதேஷ் பிரசாத் களமிறக்கப்பட்டார். தேர்தலின் முடிவில் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் அவதேஷ் பிரசாத் வென்றார். பாஜகவையும் அதன் தலைவர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது, அயோத்தியை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதியின் வெற்றி.

இதனிடையே பாஜகவின் தோல்வி மற்றும் சமாஜ்வாதியின் வெற்றிக்கு அயோத்தி ராமரின் ஆசிர்வாதமே காரணம் என திருவாய் மலர்ந்திருக்கிறார் அவதேஷ் பிரசாத். உத்தரபிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக கடும் பின்னடைவை சந்தித்திருக்கும் பாஜகவை இது மேலும் சீண்டியுள்ளது. ”உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கட்டப்பட்ட ராமர் கோவிலின் பெருமையை பாஜக கபளீகரம் செய்யப் பார்த்தது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பணவீக்கம், விவசாயிகள் வேதனை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ராமர் கோயிலை முன்னிறுத்தி அரசியல் லாபம் ஈட்ட முயன்றார்கள்.

அகிலேஷ் யாதவுடன் அவதேஷ் பிரசாத்

ஆனால் ராமர் அவர்களுக்கு தோல்வியைத் தந்திருக்கிறார். நான் பாஜகவை எதிர்த்து போட்டியிடவில்லை. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். எனது தாத்தா ராம் நவால், எனது தந்தை துக்கி ராம், சகோதரர் ராம் அவத், மாமா பரசுராம், மாமனார் ராம் சேவக் - என எங்கள் குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும், நெஞ்சங்களிலும் ஸ்ரீராமர் இருக்கிறார். அயோத்தியில் பிறந்ததை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம். அயோத்தி ராமர் மற்றும் அனுமாரின் ஆசீர்வாதத்தாலும், பாஜகவுக்கு எதிரான மக்களின் ஆதரவாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது” என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார் அவதேஷ் பிரசாத்.

இதையும் வாசிக்கலாமே...

x