நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 73 பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்.பி-கள் தேர்வாகியிருந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செப்டம்பர் 21, 2023 அன்று பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனாலும், சட்டம் இயற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்த மசோதா நடைமுறைக்கு வரும். இதனால் இந்த தேர்தலில் இந்த மசோதா நடைமுறைக்கு வரவில்லை.
2024 மக்களவைத் தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாரதிய ஜனதா கட்சி அதிகபட்சமாக 69 பெண்களையும், காங்கிரஸ் 41 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியது.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இம்முறை பாஜக சார்பில் 30 பெண்களும், காங்கிரஸிலிருந்து 14 பெண்களும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து 11 பெண்களும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 4 பெண்களும், திமுக சார்பில் 3 பெண்களும், ஜேடியு சார்பில் 2 பெண்களும், எல்ஜேபி (ஆர்) சார்பில் 2 பெண்களும் வெற்றி பெற்றனர். மாநிலங்களைப் பொறுத்தவரை மேற்கு வங்கம் அதிகபட்சமாக 11 பெண் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, தேர்வாகியுள்ள 18வது மக்களவையில் 13.44% பெண் எம்.பி.க்கள் இருப்பார்கள். இது 1952க்குப் பிறகு அதிக விகிதங்களில் ஒன்றாகும். அதிகபட்சமாக 17வது மக்களவையில் 78 பெண் எம்.பி.க்கள் இருந்தனர், இது மொத்தத்தில் 14%க்கும் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில் 16வது மக்களவையில் 64 பெண் உறுப்பினர்களும், 15வது மக்களவையில் 52 பெண்களும் இருந்தனர்.
பாஜகவின் ஹேமா மாலினி, டிஎம்சியின் மஹுவா மொய்த்ரா, என்சிபியின் சுப்ரியா சுலே, திமுகவின் கனிமொழி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் ஆகியோர் முக்கியமான பெண் எம்.பிக்கள் ஆவர். நடிகை கங்கனா ரனாவத் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி ஆகியோரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
கட்சிகளைப் பொறுத்தமட்டில், தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி, அதன் வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு வழங்கியது. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 40% பெண் வேட்பாளர்களைக் கொண்டிருந்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பிஜு ஜனதா தளம் தலா 33% பெண்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 29%, சமாஜ்வாதி கட்சி 20% மற்றும் திரிணமூல் காங்கிரஸ் 25% பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கினர்.
மக்களவைத் தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் மூன்று திருநங்கைகள் சுயேட்சைகளாக போட்டியிட்டனர், ஆனால் யாரும் வெற்றிபெறவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!
ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!
தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!
எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!