கைகொடுக்காத ராமர் கோயில் மேஜிக்: அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு!


அயோத்தி ராமர் கோயிலில் வழிபடும் பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சாதனையான குறிப்பிடப்படும் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 297 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி 229 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அயோத்தி ராமர் கோயில்

நடப்பு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக, உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி ராமர் கோயிலை கட்டி ராம பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்துவிட்டிருந்ததை பெரிய சாதனையாக கொண்டாடியது. மேலும், ராமர் கோயிலை மையாக வைத்து உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மிகப்பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அத்தொகுதியில் பிற்பகல் நிலவரப்படி, பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை விட, சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அவதேஷ் பிரசாத், லல்லு சிங் (வலது)

தேர்தல் ஆணைய இணையதள தகவல் படி, உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 36 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்களான அகிலேஷ் யாதவ் (கன்னோஜ்), அவரது மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி) ஆகியோர் வெற்றி முகத்தில் உள்ளனர். எனினும் பாஜகவின் முக்கிய அரசியல், ஆன்மிக களமான அயோத்தி உள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு அக்கட்சியினருக்கு கவுர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x