மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கிவிட்டது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்றுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கும் எண்ணும் பணி காலை 8 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அரை மணி நேரத்துக்குப் பிறகு, காலை 8.30 மணிக்குப் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் அகற்றப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை துவங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு வாக்கு எண்ணும் பணியை வீடிேயா எடுக்க ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸாருக்கும், அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தபால் வாக்குகளில் முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதேபோல் மற்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. நண்பகல் 12 மணிக்கு ஓரளவு முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். தேசிய அளவில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காலை 8.20 மணி நிலவரப்படி பாஜக 158 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிற்பகலில் யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது ஓரளவு உறுதியாகி விடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.