மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளை விளக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும், கடந்த சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், நாடு முழுவதும் உள்ள 150 மாவட்ட ஆட்சியர்களை, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு பேசியதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இதுவரை 150 மாவட்ட ஆட்சியர்களிடம் (தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) அமித் ஷா பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல். பாஜக எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. மக்களின் விருப்பமே வெல்லும்.
ஜூன் 4ம் தேதி, மோடி, அமித் ஷா மற்றும் பாஜக வெளியேற்றப்படுவர். இந்தியா ஜன்பந்தன் வெற்றி பெறும். அதிகாரிகள் எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும்.” என கூறினார்.
இந்நிலையில் அமித் ஷா குறித்த குற்றச்சாட்டு குறித்து திங்கள்கிழமை இரவு 7 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க ஒருவாரம் கால அவகாசம் அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
கருத்து கணிப்புகள் 2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தயாரிக்கப்பட்டவை; மம்தா அதிரடி!