அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்: எம்எல்ஏ ரவி ராணா!


மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் இணைவார் என அமராவதி எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளார்.

அமராவதி எம்எல்ஏ ரவி ராணா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார். அமராவதி மக்களவைத் தொகுதியில் நவ்நீத் ராணா (ரவி ராணா மனைவி) 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ரவி ராணா, நவ்நீத் ராணா

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதிக அளவில் வாக்களித்துள்ளதால் நவநீத் ராணா மீண்டும் எம்பி-யாவார். ஜூன் 4 அன்று சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாதி (எம்விஏ) தலைவர்கள் ரத்த அழுத்த மருந்துகளையும், மருத்துவர்களையும் தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ- பல்வந்த் வான்கடே, பிரஹர் ஜனசக்தி கட்சியின் தினேஷ் பப் ஆகியோரை எதிர்த்து எம்எல்ஏ- ரவி ராணாவின் மனைவியும் நடிகையுமான நவ்நீத் ராணா, போட்டியிட்டுள்ளார்.

நவ்நீத் ராணா

அமராவதி தொகுதியின் தற்போதைய எம்பி-யாக உள்ள இவர், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியில் உள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நவநீத் ராணா, அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாலிசா பாராயணம் தொடர்பாக ராணா தம்பதி, மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

x