முதல் முறை கருச்சிதைவு... எமோஷனல் ஸ்டோரி பகிர்ந்த ‘சரவணன் மீனாட்சி’ ஸ்ரீஜா!


செந்தில் - ஸ்ரீஜா

"முதல் முறையாக கருச்சிதைவு ஏற்பட்டபோது எமோஷனலாக உடைந்து விட்டேன்” என ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ஸ்ரீஜா கூறியிருக்கிறார்.

’சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் புகழ்பெற்றவர் ஸ்ரீஜா. இந்த சீரியலில் சரவணனாக நடித்த செந்திலையே காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் கழித்தே முதல் குழந்தை பிறந்தது. மகனின் முதல் பிறந்தநாளையும் சமீபத்தில் இந்த ஜோடி கொண்டாடி இருந்தது.

திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆனதைக் கொண்டாடும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் தனக்கு முதல் முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது குறித்து எமோஷனலாகப் பேசியிருக்கிறார் ஸ்ரீஜா.

அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “நீண்ட வருடங்கள் கழித்து நான் அம்மாவாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தாய்மையை முழுமையாக அனுபவித்து வருகிறேன். என்னுடைய குழந்தையை மட்டுமல்ல, பிற குழந்தைகளைப் பார்க்கும்போது கூட அந்த தாய்மை உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. பல சமயங்களில் என் குழந்தை குறும்பு செய்யும் போது கோபமாக வரும்.

ஆனால், அந்த கோபத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு என் குழந்தை என்னை மாற்றி இருக்கிறது. முதல் முறை நான் கருவுற்றபோது கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. அந்த விஷயம் என்னை எமோஷனலாக மாற்றியது. மருத்துவ ரீதியாக எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது ஏன் இப்படி நடந்தது என்று பல முறை யோசித்து அழுதிருக்கிறேன்.

ஆனால், அந்த மனஅழுத்தத்திற்கு எல்லாம் மகிழ்ச்சியான விஷயமாக எங்கள் மகன் வந்திருக்கிறான்” என்று பேசியுள்ளார்.

x