மின்னல் தாக்கி பயங்கர தீ விபத்து... அடுத்தடுத்து எரிந்து நாசமான 4 கடைகள்!


அடுத்தடுத்த 4 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து

திருவண்ணாமலையில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை காந்தி சிலை அருகே உள்ள கொசமடா தெருவில் பிளாஸ்டிக் கடை, பொம்மைக்கடை, சைக்கிள் கடை, மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை உரிமையாளர்கள் மாலையில் கடைகளை சாத்திவிட்டு கிளம்பிச்சென்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பல கன மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

4 கடைகளில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம்

இருப்பினும் கடந்து சில நாட்களாக வெப்பம் கொளுத்தி வந்த நிலையில், இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவியது. மழையின் போது அடுத்தடுத்து சக்தி வாய்ந்த மின்னல்கள் தோன்றி மறைந்தது. இதில் ஒரு மின்னல் கொசமடா தெருவில் உள்ள பிளாஸ்டிம் கடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. மின்னல் விழுந்ததால் அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்து இருந்த கடைகளுக்கும் மளமளவென பரவியது. உடனடியாக இது தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்க போராடும் தீயணைப்புத்துறையினர்

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தியதோடு பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பிளாஸ்டிக் கடையின் பின்புறம் இருந்த குடோனிலும் தீ பரவியதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x