நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக 370க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேலான இடங்களிலும் வெற்றி பெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று மாலை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதும், அவை பாஜகவுக்கு சாதகமாக அமைந்ததும், இப்போதே மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உற்சாகத்தை அக்கட்சியினருக்கு தந்துள்ளன. அந்த உணர்வுகளை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் பிரதிபலித்துள்ளார்.
ஊழலை ஒதுக்கி வைப்பதற்காகவும், திறமையான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவுக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியானதை ஒட்டி அவர் இவ்வாறு தெரிவித்தார். பாஜக 370க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேலாகவும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இந்த ஜனநாயகத்தின் திருவிழாவை பாஜகவுக்கு வெற்றிகரமாக மாற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். அவரது முயற்சிகள் நிச்சயமாக பலனைத் தரும் என்றும் நட்டா பெருமித நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கும், தேர்தலின் போது அவர்கள் அளித்த பங்களிப்பிற்காகவும், கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் நட்டா நன்றி தெரிவித்தார்.
ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவித்த நட்டா, அவர்களின் கடின உழைப்பால், தங்கள் எண்ணங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.