மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் சிறுவன் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி மோசடி செய்த அவனது தாயை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த மே 19ம் தேதி, அதிகாலை 'போர்ஷே' சொகுசு காரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்து பைக்கில் சென்ற இருவர் மீது மோதினான். இந்த விபத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஒரு இளைஞர், இளம்பெண் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுவனுக்கு எளிதான தண்டனைகளுடன் 15 மணி நேரத்தில் சிறார் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பொதுமக்களிடையே இது பெரும் அதிருப்தி, கண்டனங்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
இதற்கிடையே பொறுப்பற்ற முறையில் காரை வழங்கிய அவரது தந்தை விஷால் அகர்வால், சிறுவனுக்குப் பதிலாக வேறு ஒருவர் கார் ஓட்டியதாக ஆள்மாறாட்ட மோசடிக்கு முயன்ற சிறுவனின் தாத்தா, சிறுவன் மது அருந்த அனுமதித்த மதுபானக் கூட உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.
மேலும், ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறுவன் மதுபரிசோதனையை கண்டறியும், ரத்த மாதிரிகளை மாற்றி மோசடியில் ஈடுபட்ட மருத்துவர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அரசு நடத்தும் சசூன் மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதனையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மும்பை கிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பல்லவி சபாலே தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மகாராஷ்டிர மருத்துவக் கல்வி ஆணையம் நியமித்தது.
இந்நிலையில் சிறுவனின் தாய் ஷாலினி அகர்வால், சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக தனது ரத்த மாதிரியை மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை தேடுவது தெரிந்ததும் கடந்த சில நாள்களாக அவர் தலைமறைவானார். இந்நிலையில் ஷாலினி அகர்வாலை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.