மரக்கிளையை வெட்டியபோது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு @ நாமக்கல்


மின்சாரம் தாக்கி உயிரிழந்த தங்கவேல். அவரது மனைவி  சரஸ்வதி. 

கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த குமாரபாளையம் அருகே, யூக்கலிப்டஸ் மரக்கிளையை வெட்டியபோது மின்சாரம் தாக்கி மனைவியும், கணவனும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குள்ளநாயக்கன் பாளையம் சானாங்காடு தோட்டத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (57). இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்த்து வந்தார். அந்த மரங்கள், உயரமாகி, அருகில் இருந்த மின்சார கம்பிகளில் உரசியபடி இருந்தன.

இந்நிலையில், தங்கவேலின் மனைவி சரஸ்வதி (54), மின்சார கம்பிகளை உரசியபடி இருந்த மரத்தின் கிளைகளை, இரும்புக் கம்பி மூலமாக, வெட்டி அகற்றிட முயற்சித்தார். அப்போது, சரஸ்வதி பயன்படுத்திய இரும்புக் கம்பி, எதிர்பாராத விதமாக, மின்சார கம்பி மீது உரசியது.

இதனால், சரஸ்வதி மீது மின்சாரம் பாய்ந்து அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தங்கவேல், தனது மனைவி சரஸ்வதி காப்பாற்ற முயற்சித்தபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக, குமாரபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.