தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் 6வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கடந்த 2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலய பங்குதந்தை ஜேசுதாஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதே போல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன், திமுக மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், துப்பாக்கிச் சூடு இருக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அப்போது வலியுறுத்தினர். மேலும் உயிரிழந்தவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.