ஒரு ஊழல் கட்சி மற்றொன்றை பாதுகாக்கிறது: காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியை சாடிய பிரதமர் மோடி!


நரேந்திர மோடி

காங்கிரஸ் -ஆம் ஆத்மி கூட்டணி சந்தர்ப்பவாதமானது. ஒரு ஊழல் கட்சி மற்றொரு ஊழல் கட்சியை எப்படி பாதுகாக்கிறது என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

வடக்கு டெல்லியில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ 140 கோடி இந்தியர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகத் என்னை அர்ப்பணித்துள்ளேன். எனது ஒவ்வொரு நொடியும் நாட்டிற்காக உள்ளது, எனது வாழ்க்கை மக்களின் கனவுகளை நனவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நான் ஜனநாயகத்திற்காகவே வாழ்கிறேன், கடுமையாக உழைக்கிறேன் . ஜனநாயகம் என்னுடைய இதயத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. அதனால்தான் எனது அரசாங்கம் அனைத்து பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளது” என்று அவர் கூறினார்

அர்விந்த் கேஜ்ரிவாலுடன் மல்லிகார்ஜுன கார்கே

மேலும், “இந்த காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி டெல்லியை அழிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அரசியல் தரத்தில் வீழ்ச்சி மற்றும் மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்கு அதன் தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என சொல்லிக்கொண்ட ஆம் ஆத்மி கட்சியினர் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்து சிறையில் இருக்கிறார்கள். டெல்லியில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி சந்தர்ப்பவாதமானது. ஒரு ஊழல் கட்சி மற்றொரு ஊழல் கட்சியை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் காந்தி குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்பட்டனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து பேசிய அவர், “2014 தேர்தலின் போது அப்போதைய காங்கிரஸ் அரசு டெல்லியில் முக்கிய இடங்களில் இருந்த 123 சொத்துக்களை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. எனவே காங்கிரஸ் அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தது. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தனது வாக்கு வங்கி அரசியலுக்கான எந்த எல்லைக்கும் செல்வார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...

x