கோவை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம், பசுமையான புல்வெளியில் படுத்து உறங்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஆனைமலை காடுகள், யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த வெயிலால் வனப்பகுதி வறட்சியாய் காணப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்து வருகின்றன. இதனால், வன விலங்குகள் உற்சாகமடைந்துள்ளன.
இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஒரு காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது. குட்டியுடன் உலா வரும் இந்த யானைக் கூட்டம், அடர் வனப்பகுதியில் ஒரு இடத்தில் ஓய்வெடுத்துள்ளன. அப்போது குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன. குட்டி யானை உட்பட 4 காட்டு யானைகள் தரையில் படுத்து கால் நீட்டி உறங்க, ஒரு பெண் யானை, உறங்கி கொண்டிருக்கும் யானைகளுக்கு காவலாக நின்றிருந்தது. இந்த அழகிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர் வனத்தில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் வகுப்பு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். நமது சொந்தக் குடும்பங்களைப் போலவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்