செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்பதற்காக வழக்கை வருகிற ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி கடந்த 10 மாதங்களாக, கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டும், அப்போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞரை ஆஜராக உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை நாளைக்கு விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை நிராகரித்தது. மேலும், அமலாக்கத்துறையின் விளக்கத்தை கேட்காமல் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 10ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்