வாராணசியில் மோடியின் வேட்புமனுவை பெற்றுக்கொண்ட ஐஏஎஸ் அதிகாரி யார் தெரியுமா?


ஆட்சியர் ராஜலிங்கத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்த மோடி

2024 மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை பெற்றுக்கொண்டது தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத் தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூன் 1-ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக இந்தத் தேர்தலிலும் வாராணசியில் அவர் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை, வாராணசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜலிங்கம் பெற்றுக் கொண்டார். ஆட்சியர் ராஜலிங்கம், தமிழகத்தின் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர். திருச்சி என்ஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற ராஜலிங்கம், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்தார்.

ஆட்சியர் ராஜலிங்கம்

தொடர்ந்து, 2009-ம் ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆனவர் உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். மக்கள் மத்தியில் திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் ராஜலிங்கம் பிரதமர் மோடியின் தொகுதியும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோயில் நகரமுமான வாராணசியின் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரதமர் மோடியிடம் ராஜலிங்கம் வேட்பு மனுவை பெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி தென்காசி மாவட்ட மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

ஆட்சியர் ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா

இதுகுறித்து ஆட்சியர் ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா கூறுகையில், "எனது மகன் வாராணசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின் வாராணசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கியுள்ளார். அவர் எடுத்த முயற்சிகளால் வாராணசி நகரமே தூய்மை மிக்கதாக மாறியுள்ளது. எனது மகன் ராஜலிங்கத்தால் தமிழ்நாடும், கடையநல்லூர் பகுதி மக்களும் பெருமை கொள்வதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களாகிய நாங்களும் பெருமை கொள்கிறோம்" என்றார்.

x