ஹைதராபாத்தில் வாக்களிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் மாதவி லதா, அங்கிருந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் அட்டையை வாங்கி, அவர்களின் பர்தாக்களை விலக்கி முகத்தைக் காட்டச் சொல்லி சரிபார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது, மசூதி ஒன்றை நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பாஜக வேட்பாளர் மாதவி லதா, செகந்திராபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, அங்கு வாக்களிப்பதற்காக காத்திருந்த இஸ்லாமிய பெண்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்த அவர், அவர்களது ஆதார் கார்டுகளை வாங்கி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார். அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து இஸ்லாமிய பெண் ஒருவரின் குழந்தையை வாங்கி அவர் கொஞ்சினார். தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாகவும், பலருக்கு வாக்குகள் இல்லை எனவும் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து புகார் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!