கேஜ்ரிவால் இல்லத்தில் என்னை தாக்கினர்: ஆம் ஆத்மி பெண் எம்பி குற்றச்சாட்டால் பரபரப்பு


ஆம் ஆத்மி எம்பி- ஸ்வாதி மாலிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் அவரது உதவியாளர் பிபவ் குமார், தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்பி-யும், மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருந்து வந்தவர் பிபவ் குமார். இவரது நியமனம் சட்ட விரோதமானது என கூறி சமீபத்தில் பிபவ் குமார் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி-யும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பிபவ் குமார்

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “முதலமைச்சர் இல்லத்திலிருந்து காலை 10 மணியளவில் காவல் துறைக்கு பிசிஆர் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சுவாதி மாலிவால் போலீஸாரிடம் ஒரு புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து போலீஸார், சிவில் லைன்ஸில் உள்ள முதலமைச்சர் இல்லத்துக்கு சென்றனர். எனினும் சுவாதி மாலிவால் தரப்பிலிருந்து போலீஸாருக்கு முறையான புகார் இன்னும் வரவில்லை” என்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு பிபவ் குமார், அரசு ஊழியரை தாக்கி, கடமையைச் செய்யவிடாமல் தடுத்த வழக்கில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம், பிபவ் குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.

இந்நிலையில் தற்போது ஆம் ஆத்மி எம்பி- சுவாதி மாலிவாலை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இந்நிலையில் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி பெண் எம்பி, முதல்வர் இல்லத்தில் தாக்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x