தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பழங்குடி மக்கள் தங்கள் வசிப்பிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வனத்துறையால் வெளியேற்றப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள எடத்தாறு மற்றும் வேப்பமரத்து கொம்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, குறைந்தது ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்தனர். அவர்களை வனத்துறையினர் அண்மையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம்.
மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.