கடந்த மே 7ம் தேதி 93 தொகுதிகளில் நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், 89 தொகுதிகளுக்கு ஏப்.26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும், 94 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்று முடிந்தது. மூன்றாம் கட்ட தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்குவங்கம், அசாமில் தலா 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், டையூ டாமனில், தாத்ரா நகர் ஹவேலி ஆகியவற்றிலும் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மே 7ம் தேதி 93 தொகுதிகளில் நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது. முக்கியமாக குஜராத் மாநிலத்தில் 60.13% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனால், அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்கள் வாரியாக பதிவான வாக்கு சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அசாம் - 85.45%
பீகார் - 59.15%
சத்தீஸ்கர் - 71.98%
டையூ டாமனில், தாத்ரா நகர் ஹவேலி - 71.31%
கோவா - 76.06%
குஜராத் - 60.13%
கர்நாடகா - 71.84%
மத்திய பிரதேசம் - 66.75%
மகாராஷ்டிரா - 63.55%
உத்தரபிரதேசம் - 57.55%
மேற்கு வங்காளம் - 72.21%