75 வயதானாலும் பிரதமர் மோடி மாற்றப்படமாட்டார்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில்!


அமித் ஷா, மோடி

அடுத்த ஆண்டு நரேந்திர மோடிக்கு 75 வயதாகப் போகிறது, பாஜக விதிகளின்படி அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா என்று அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார்.

இன்று ஹைதராபாத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நரேந்திர மோடிஜி 75 வயதை அடைந்த பிறகும் மாற்றப்பட மாட்டார். மோடிஜியை நாங்கள் மாற்ற வேண்டியதில்லை, இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். அவர் மாற்றப்பட மாட்டார் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். பிரதமர் மோடியின் ஓய்வு குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு இது பதில் என்று அமித் ஷா கூறினார்.

அர்விந்த் கேஜ்ரிவால்

முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், "2014ல் பாஜக தலைவர்கள் 75 வயதுக்கு பின் ஓய்வு பெறுவார்கள் என்று பிரதமர் மோடியே விதியை உருவாக்கினார். இதன்படி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டார்கள். இப்போது மோடி ஓய்வு பெறப் போகிறார். அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி மோடிஜிக்கு 75 வயதாகிறது. நான் மோடிஜியிடம் கேட்க விரும்புகிறேன், நீங்கள் அமித் ஷாவுக்காக ஓட்டு கேட்கிறீர்களா?. மோடியின் உத்தரவாதத்தை அமித் ஷா நிறைவேற்றுவாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா

அதேபோல தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு பாஜகவில் ஓய்வு பெறுவதற்கான வயது 75 என்று அவர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அப்படித்தான் அவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக முடிவுகளை எடுத்துள்ளார். இப்போது நரேந்திர மோடி 74 வயதை கடக்கப் போகிறார். இன்னும் ஓராண்டு உள்ளது. நரேந்திர மோடியிடம் இதே கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். 75 வயதில் ஓய்வு பெற நீங்கள் தயாரா?” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

x