'ஊழலின் முடிசூடா மன்னன்’ கேஜ்ரிவால்: போஸ்டர் வெளியிட்டது பாஜக


அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி பாஜக வெளியிட்ட போஸ்டர்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 'ஊழலின் முடிசூடா மன்னன்' என்ற வாசகத்துடன் அம்மாநில பாஜக போஸ்டர் வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் இன்று காலை கேஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்பி- சஞ்சய் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த மறு நாளே, நேரத்தை வீணடிக்காமல் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தை கேஜ்ரிவால் துவங்குகிறார். 50 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் கேஜ்ரிவால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்ததும், அவரை எதிர்கொள்ள பாஜகவும் ஆயத்தமாக உள்ளது. இந்நிலையில் கேஜ்ரிவாலை மையப்படுத்தி டெல்லி பாஜகவின் அதிகாரப் பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கேஜ்ரிவால் படத்துடன் 'ஊழலின் முடிசூடா மன்னன்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஊழல் செய்பவர் ஜெயிலில் இருந்தாலும் சரி, பெயிலில் வெளியே இருந்தாலும் சரி, ஊழல் செய்பவர் ஊழல்வாதியாகவே இருக்கிறார் எனவும் பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக, ஆம் ஆத்மி கட்சி

ஜாமீனில் வெளியே வந்துள்ள கேஜ்ரிவால் தனது பாணியில் தேர்தல் பிரச்சாரத்தில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பார் என பாஜக நம்புகிறது. எனவே, ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவாலை ஊழல் விவகாரத்தை கொண்டு எதிர்கொள்ளும் முயற்சியை பாஜக முன்னெடுத்துள்ளது.

மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு காலிஸ்தான் ஆதரவு நிதி வருவதாக முன்னிலைப்படுத்த பாஜக தீர்மானித்துள்ளது. ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவால் தொடர்பான ஊழல், தேசிய பாதுகாப்பு கவலைகள் குறிப்பிட்டு பஞ்சாப்பிலும் பிரச்சாரத்தை முன்னெடுக்க பாஜக தீர்மானித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x